Friday 13 April, 2007

ஈனப்பொறப்புக்கு...

பெயர்
பெத்தவங்களுக்கு
பாப்பா
பள்ளிகூடத்தில்
கட்டச்சி
அண்ணனுக்கு
மண்ணுதின்னி
மாமன் மவனுக்கு
கருப்பி
புருஷனுக்கு
பன்னாடை
மாமியார்காரிக்கு
மலடி
வாழுறப்பதான் பேரில்லன்னா
செத்ததுக்கப்புறம்
பொணம்கிறாங்க!

ஈனப்பொறப்புக்கு
இளவரசின்னு பேரவச்சு
எந்தவாயும் கூப்புடலையே...
பாவிமகளேன்னு
மாரடிக்கிறா
பேரு மறந்துபோன பெரிய கிழவி.

- கவிதாகுமரன்.

(நன்றி : பெண்ணே நீ,ஏப்ரல் 2007)

Friday 2 February, 2007

அப்போதைய மனநிலையில்...

அவர்கள்
என் குரலைப் பறித்துக் கொள்ள வந்திருக்கிறார்கள்.

இப்போது,
எனக்குப் பெயரில்லை,
முகமில்லை.
ஆனால் ஓர் உறுதியுண்டு;
எப்போதும்,
என் குரலை நான் இழக்கமாட்டேன்,
பாடாமல் ஓய்ந்துப் போகமாட்டேன்!

எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் சரி,
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்,
என் கனவுகளையெல்லாம்
நிஜங்கள் கொன்று போட்டாலும் பரவாயில்லை.
நான் பாடிக் கொண்டேயிருப்பேன்...

இழுத்துப் பீய்க்கப்படும பாட்டாம்பூச்சிகளைப் பற்றி.

-
சல்மான் ருஷ்டி.
  • சாத்தானின் கவிதைகள் எழுதியதற்காக 1989 பிப்ரவரி 14 அன்று, சல்மான் ருஷ்டிக்கு இரான் அதிபர் அபயதுல்லா கோமேனி மரண தண்டனை விதி்த்தார். இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த சல்மான் ருஷ்டி 1989 மார்ச் 6 அன்று, அப்போதைய மனநிலையில் எழுதிய கவிதை.

Saturday 6 January, 2007

கலீல்ஜிப்ரானின் நாடு

கலீல்ஜிப்ரான் என்றால் நமக்கெல்லாம் அவர் படைத்த “முறிந்த சிறகுகளும’’, “சல்மா’’வும்தான் நினைவுக்கு வரும்.
அவர் தன்னுடைய லெபனான் நாட்டைப் பற்றியும் மிகுந்த அக்கறையுடன் நிறைய எழுதியுள்ளார்.
அதில் ஒன்றுதான் இந்த வசன கவிதை.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தன் அரபு இன மக்களுக்காக இதை எழுதியுள்ளார்.

"மத்திய கிழக்கில் இன்று
இருவகை மனிதர்கள்
இருக்கின்றனர்.
ஒருவர் இறந்த காலத்துக்காரர்.
மற்றொருவர் வருங்காலத்துக்காரர்.
அவர்களுள் நீ யார்?

என் அருகில் வா
நான் உன்னைப் பார்க்கவேண்டும்.
உன் தோற்றத்தில், நடத்தையில்
நீ
வெளிச்சத்திற்குள் வருபவனா?
இல்லை இருளுக்குள் செல்பவனா? என்பதை
நான் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

வா! நீ யார், எத்தகையவன்?
என்பதை என்னிடம் சொல்.

உன் நாடு உனக்கு என்ன செய்யும்
என்று கேட்கும் அரசியல்வாதியா நீ?
இல்லை, உன் நாட்டுக்கு நீ என்ன
செய்யமுடியும் என்று கேட்கும்
பற்றார்வம் கொண்டவனா?

நீ முதலாமவன் என்றால்
நீ ஓர் ஒட்டுண்ணி.
இரண்டாமவன் என்றால்
நீ பாலைவனத்தில்
ஒரு நீருற்று."

இதுதான் அக்கவிதை.
இதில் நீங்கள் எந்த வகை?