Wednesday 22 October, 2008

ஈழத்துக் கவிதை-1 "பயிற்சி முகாமிற்கு ஓர் கடிதம்!" - செழியன்

கார்த்திகா!
என் நினைவுகளோடும்
உடலோடும்
என்னுடையவளாகிவிட்டவளுக்கு!

இப்போதெல்லாம்
இங்கு பூக்கள்
வாசனை வீசுவதில்லை
கருவண்டுகளெல்லாம் தெருக்களில்
செத்துச் செத்துக் கிடக்கின்றன.
நிலவு பெய்கின்ற
இரவுகளெல்லாம்
இப்போ இனிப்பதேயில்லை.

நேற்று-
என்னுடைய துப்பாக்கிக்கு
நான் எண்ணெய் தடவும் போது
அந்த நாட்களில்
என் மார்பில் சாய்ந்திருந்து
நீ செய்த குறும்புகளெல்லாம்
என் நினைவுக்கு வந்தன.

கார்த்திகா!
கடந்து போனவையை நினைப்பதிலும்
ஒரு சுகம் இருக்கிறது.

கார்த்திகா!
போன தடவை எழுதியிருந்தேனே
என் கூடவே இருக்கின்ற
எனக்கும் பிரியமான
முரட்டுத் தோழனைப் பற்றி
நன்றாகவே சண்டை போடுவான்.

என் துப்பாக்கிக்கு
சில வேளைகளில் அவன்தான்
எண்ணை போட்டு வைப்பான்
உன்னைப் பற்றி அவனிடம்
நிறையவே பேசியிருக்கிறேன்.
அவனுக்கும் ஒரு
இளம் காதலி இருக்கிறாள்
அவன் ஆரம்பத்தில் படித்த
புத்தகங்களெல்லாம் இப்போ
அவளுக்கு கொடுத்து வருகிறான்.

கார்த்திகா!
என்னவென்று
அதை நான் எழுதுவது
சென்ற வாரம் நடைபெற்ற
தாக்குதலின் போது
அவன் செத்துப் போய்விட்டான்.
அவனது பிரியமான துப்பாக்கியில்
இப்போ
அவனது காதலி
சுடுவதற்குப் பழகி வருகிறாள்.

கார்த்திகா!
மரணத்தை எதிர்கொண்டு
நாங்கள் காத்திருக்கிறோம்
எங்கள் துப்பாக்கிகளுக்காக
புதிய தோழர்கள் காத்திருக்கிறார்கள்.

பயிற்சி முடிந்து விரைவில்
நீ திரும்பி வருவாயென
எதிர்பார்க்கிறேன்.
நீ வரும்போது
ஒருவேளை
நான் இல்லாமற் போகலாம்.

கார்த்திகா!
மக்களை நேசித்த
எங்கள் கண்களில்
கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை
நான் வெறுக்கிறேன்.
மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து
மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட
எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும்
என் சமாதியில்
அழுகையின் ஒலி
கேட்கவே கூடாது.

கார்த்திகா!
என்னவளே!
என் சமாதியில்
முட்களைத் தாங்கி
அழகிய பூச்செடி ஒன்று
துளிர்விட்டு வளரும்.
நான் நம்புகிறேன்.


(1985 / இல்லாமல் போன தோழனுக்கு).

மரணத்துள் வாழ்வோம் - விடியல் பதிப்பகம்.

1 comments:

Anonymous said...

தற்போதைய ஈழப் போர்ச் சூழலுக்குத் தகுந்தார்ப் போல் அமைந்துள்ல கவிதை.

தொடர்ந்து வெளியிடவும்.